Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 18.09.22

 Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

18-09-2022  ஓம் சாந்தி  அவ்யக்த பாப்தாதா  மதுவனம் 15/04/1992

<

Listen to the Murli audio file



பிராமணர்களின் இரண்டு அடையாளங்கள் - நம்பிக்கையும் வெற்றியும்.

இன்று, பாப்தாதா எங்கும் உள்ள பிராமணக் குழந்தைகளின் இரண்டு விசேடமான அடையாளங்களைப் பார்க்கிறார். பிராமணர்கள் என்றால், புத்தியில் நம்பிக்கை உடையவர்கள் என்று அர்த்தம். ஏனெனில் புத்தியில் நம்பிக்கை உள்ளதென்றால் வெற்றியாளர் என்று அர்த்தம். எனவே, பிராமணர்களான உங்கள் ஒவ்வொருவரின் புத்தியிலும் எந்தளவிற்கு நம்பிக்கை உள்ளது? எந்தளவிற்கு நீங்கள் வெற்றியாளர்கள் ஆகியுள்ளீர்கள்? பிராமண வாழ்க்கையின் அத்திவாரமே நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் அத்தாட்சி வெற்றியாகும். எனவே, நம்பிக்கையினதும் வெற்றியினதும் சதவீதங்கள் சமமாக உள்ளதா? அல்லது, வேறுபாடு காணப்படுகிறதா? பாபா என்ன பெறுபேற்றைப் பார்த்திருப்பார்? எல்லோரும் அதிகளவு சதவீதமான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையை விடக்குறைந்தளவு சதவீதமான வெற்றியே அனுபவம் செய்யப்படுகிறது. உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என நீங்கள் மற்றவர்களிடம் கேட்டால், அவர்கள் எல்லோரும் தம்மிடம் 100 சதவீதம் நம்பிக்கை உள்ளதாகக் கூறுவார்கள். எவ்வாறாயினும், அவர்களின் நம்பிக்கையின் பெறுபேறாக எத்தனை சதவீதம் வெற்றி கிடைக்கிறது? அதற்கு அவர்கள் 100 சதவீதம் எனப் பதில் அளிப்பார்களா? நம்பிக்கையுள்ள புத்தியானது உங்களை வெற்றியாளர் ஆக்கும் என்பதே உங்களின் சுலோகனாகும். அப்படியாயின், நம்பிக்கைக்கும் வெற்றிக்கும் இடையில் ஏன் வேறுபாடு காணப்படுகிறது? நம்பிக்கை, வெற்றி என்ற இரண்டு அடையாளங்களும் சமமாக இருக்க வேண்டும், அப்படித்தானே? எவ்வாறாயினும், ஏன் அதில் வேறுபாடு காணப்படுகிறது? இதற்கான காரணம் என்ன? ஓர் அத்திவாரம் பலமானதாக அமைக்கப்படுவதற்கு, அந்த அத்திவாரத்தின் நான்கு பக்கங்களிலும் கவனம் செலுத்தப்படும். அதன்மூலம் அது பலமானதாகக் கட்டப்படும். இந்த நான்கு பக்கங்களில் ஒரு மூலை பலவீனமாக இருந்தால், அந்த அத்திவாரம் பலமானதாக இருக்குமா? அல்லது அது தொடர்ந்து அசையுமா? அதேபோல், நான்கு திசைகளிலும், அதாவது, நான்கு குறிப்பிட்ட விடயங்களில் நம்பிக்கையின் அத்திவாரம் இருக்க வேண்டும் என்றால், முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த நான்கு விடயங்களைப் பற்றி முன்னரும் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

1. தந்தை என்ன செய்பவராக இருந்தாலும், அவர் எத்தகையவராக இருந்தாலும், தந்தையின் மீது முழுமையான நம்பிக்கை. பாபா வழங்கும் ஸ்ரீமத்தை அவர் கொடுக்கும் முறையில், அதன் வழிமுறைக்கேற்ப மிகச்சரியாகப் புரிந்துகொள்வதுடன், அதை ஏற்றுக் கொண்டு, அதைப் பின்பற்றுதல்.

2. சம்பூரணமான, மேன்மையான சுயமரியாதை உடைய ஆத்மாவாகிய உங்களின் மேன்மையான பாக்கியத்தின் வடிவத்தை அறிந்து, அதை ஏற்றுக் கொண்டு, அதைப் பின்பற்றுதல்.

3. உங்களின் மேன்மையான பிராமணக் குடும்பத்தை மிகச்சரியாக வழிமுறைக்கேற்ப அறிந்து, அதை ஏற்றுக்கொண்டு, அதில் ஒருவர் ஆகுதல்.

4. இதுவே இந்த முழுக்கல்பத்திலும் அதிமேன்மையான, புண்ணிய சங்கமயுகம் என்பதை அதன் முக்கியத்துவத்துடன் இனங்கண்டு, அதை ஏற்றுக்கொண்டு அதனுடன் முன்னேறிச் செல்லுதல்.

இந்த நான்கு விடயங்களிலும் அசைக்க முடியாத புத்திகளைக் கொண்டிருப்பவர்களும் அத்துடன் நான்கிலும் முழுமையான சதவீதத்தைக் கொண்டிருப்பவர்களும் முழுமையான, மிகச்சரியான நம்பிக்கையுள்ள புத்திகளைக் கொண்டிருப்பவர்கள் எனப்படுகிறார்கள்.

இந்த நான்கு விடயங்களும் நம்பிக்கையின் அத்திவாரத் தூண்களாகும். தந்தையில் மட்டும் நம்பிக்கை இருந்து, மூன்று தூண்களில் ஏதாவதொன்று பலவீனமாக இருந்தால், அவை எப்போதும் பலமானதாக இல்லாவிட்டால், சிலவேளைகளில் அசைந்தும், சிலவேளைகளில் அசைக்க முடியாததாகவும் இருந்தால், அப்போது தூண்களின் இந்தக் குழப்பம் உங்களைத் தோற்கடித்துவிடும். நீங்கள் வெற்றி அடைய அது அனுமதிக்காது. எந்த வகையான குழப்பமும் உங்களைப் பலவீனமாக்கிவிடும். பலவீனமாக இருக்கும் ஒருவரால் சதா வெற்றியாளர் ஆகமுடியாது. இதனாலேயே, நம்பிக்கைக்கும் வெற்றிக்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. பல குழந்தைகள் பாப்தாதாவுடன் மிகவும் அப்பாவியாகி, ‘எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, பாபா, நான் உங்களுடையவன், நீங்கள் என்னுடையவர். இது நிச்சயம். 100 சதவீத நம்பிக்கை மட்டுமல்ல, ஆனால் 500 சதவீத நம்பிக்கை உள்ளதுஎன இதயபூர்வமாக உரையாடுகிறார்கள். ஆனால்..... குழப்பமும் உள்ளது. அதன்பின்னர், பாபாவைச் சமாதானப்படுத்தும் வகையில்நீங்கள் என்னுடையவர்தானே?’ எனக்கூறி பாபாவிற்கு அதை உறுதிப்படுத்துகிறீர்கள். நீங்கள் மிகவும் அப்பாவித்தனமாக, ‘நான் உங்களுடையவன், நான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் நான் உங்களுடையவன்எனக் கூறுகிறீர்கள். எனவே, தந்தையும் கூறுகிறார்: நீங்கள் என்ன செய்பவராக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும், நீங்கள் என்னுடையவரே. எவ்வாறாயினும், பாபா எத்தகையவரோ, என்ன செய்பவரோ, அப்படியே உங்களுக்குரியவரா? அப்பாவியாக இருப்பது நல்லது. ஆனால் உங்களின் இதயத்தில் அப்பாவியாக இருங்கள். நீங்கள் சொல்வதிலும் உங்களின் செயல்களிலும் அப்பாவியாக இருக்காதீர்கள். தமது இதயத்தில் அப்பாவியாக இருப்பவர்கள், கள்ளங்கபடமற்ற பிரபுவால் நேசிக்கப்படுகிறார்கள். நீங்கள் உங்களின் வார்த்தைகளில் அப்பாவியாக இருந்தால், உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். அத்துடன் நீங்கள் மற்றவர்களையும் ஏமாற்றுகிறீர்கள். நீங்கள் உங்களின் செயல்களில் அப்பாவியாக இருக்கும்போது, உங்களுக்கே நீங்கள் தீங்கு விளைவித்துக் கொள்கிறீர்கள். அத்துடன் நீங்கள் சேவைக்கும் தீமையே செய்கிறீர்கள். ஆகவே, உங்களின் இதயத்தில் கள்ளங்கபடமற்றவராக இருங்கள். ஒரு முழுமையான சாதுவாக, அவ்வாறான கள்ளங்கபடமற்றவர் ஆகுங்கள். சாது என்றால் மகாத்மா என்று அர்த்தம். எவ்வாறாயினும், நீங்கள் கேட்கும்போது அல்லது பேசும்போது, திரிகாலதரிசி என்ற ஸ்திதியில் இருந்தவண்ணம் அதைச் செய்யுங்கள். செயல்களைச் செய்யும்போது, ஞானம் நிறைந்தவராக இருப்பதன் மூலம் ஒவ்வொரு செயலின் விளைவையும் அறிந்து பின்னர் செயல்படுங்கள். ‘அது நடந்திருக்கக்கூடாது, ஆனால் நடந்து விட்டதுஎன நீங்கள் சொல்வதாக இருக்கக்கூடாது. அல்லது, நீங்கள் பேசியிருக்கக்கூடாது, ஆனால் பேசிவிட்டீர்கள் என்பதாக இருக்கக்கூடாது. உங்களின் செயலின் விளைவை நீங்கள் அறிந்திருக்கவில்லை, அப்பாவித்தனமாக நீங்கள் அந்தச் செயலைச் செய்துள்ளீர்கள் என்பதையே இது நிரூபிக்கிறது. நீங்கள் அப்பாவியாக இருந்ததாலேயே இவை நிகழ்ந்தன என நினைக்காதீர்கள். அந்த முறையில் உங்களையே நிரூபிக்காதீர்கள். இதயத்தில் கள்ளங்கபடமற்றவராக இருக்கும் ஒருவர் எல்லோராலும் நேசிக்கப்படுவார். எனவே, எந்த முறையில் நீங்கள் கள்ளங்கபடமற்றவர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நம்பிக்கையையும் வெற்றியையும் சமம் ஆக்குவதற்கான வழிமுறை என்ன? நான்கு விடயங்களிலும் நான்கு பக்கங்களிலும் சமமான சதவீதம் காணப்பட வேண்டும். சில குழந்தைகள் வேறு என்ன சொல்கிறார்கள்? ‘பாபா, எனக்கு உங்களில் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் என்மீது எனக்கு அந்தளவு நம்பிக்கை இல்லை. சிலவேளைகளில் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. சிலவேளைகளில் அது குறைந்துவிடுகிறதுஎன அவர்கள் சொல்கிறார்கள். அந்த வேளையில் இத்தகைய ஆத்மாக்களின் மொழி என்ன? அவர்கள் ஒரேயொரு பாடலையே பாடுகிறார்கள். ‘எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது.... இது ஏன் இவ்வாறு இருக்கிறது என எனக்குத் தெரியாது. எனது பாக்கியம் என்னவென்று எனக்குத் தெரியாது. எனக்குத் தந்தையின் உதவி கிடைக்குமா இல்லையா என எனக்குத் தெரியாது. வெற்றி ஏற்படுமா இல்லையா என எனக்குத் தெரியாது’. நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான்களாக இருந்தும், இந்த விடயத்தில் நம்பிக்கை குறைவடையும்போது, ‘எனக்குத் தெரியாதுஎன்ற பாடலைப் பாடுகிறீர்கள். மூன்றாவது வகையினர் என்ன சொல்கிறார்கள்? மூன்றாவது வகையினர் சொல்கிறார்கள்: ‘பாபா, உங்களைப் பார்த்த பின்னரே நான் ஓர் ஒப்பந்தத்தைச் செய்தேன். நீங்கள் என்னுடையவர். நான் உங்களுடையவன். நான் இந்த பிராமணக் குடும்பத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை. பிராமணக் குடும்பம் முரண்பாட்டை உருவாக்குகிறது. நீங்கள் ஓகே. ஆனால் பிராமண ஒன்றுகூடலுடன் பழகுவது கஷ்டமாக இருக்கிறது. உங்களுடன் மட்டும் ஒத்திசைந்து போவது இலேசாக உள்ளது’. எனவே, பாப்தாதா என்ன சொல்கிறார்? பாப்தாதா புன்னகை செய்கிறார். இத்தகைய குழந்தைகளிடம் பாப்தாதா ஒரேயொரு கேள்வி கேட்கிறார். ஏனென்றால் இத்தகைய ஆத்மாக்கள் திருப்தியாக (பிரசன்-சித்) இருப்பதில்லை. அவர்கள் பல கேள்விகளைக் கேட்கிறார்கள் (பிரஷ்ண-சித்) : ‘இது ஏன் இப்படி இருக்கிறது? இது என்ன? இது இப்படியா இருக்க வேண்டும்? இப்படியா நிகழவேண்டும்?’ இத்தகையதோர் ஆத்மா திருப்தியான ஆத்மா இல்லை. ஆனால் கேள்விகளைக் கொண்டுள்ளதோர் ஆத்மா ஆவார். பாப்தாதாவும் இத்தகைய ஆத்மாக்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார்: நீங்கள் முக்திதாமத்தில் வசிக்கப்போகும் ஆத்மாவா? அல்லது, ஜீவன்முக்தி வாழ்க்கைக்குச் செல்லப் போகின்றீர்களா? நீங்கள் முக்திக்குள் சென்று, பின்னர் ஜீவன்முக்திக்குள் செல்லப் போகின்றீர்கள்தானே? எனவே, ஜீவன்முக்தி வாழ்க்கையில் பிரம்மாபாபா மட்டும் இருப்பாரா? அல்லது, ஓர் இராச்சியம் இருக்குமா? அங்கே பிரம்மாவும் சரஸ்வதியும், அரசனும் அரசியும் மட்டுமே இருப்பார்களா? நீங்கள் ஜீவன்முக்தியின் ஆஸ்தியைக் கோரப் போகின்றீர்கள்தானே? நீங்கள் ஒரு சவால் விடுக்கிறீர்கள். அதாவது, ஆதி சனாதன தேவதர்மத்திற்கும் ஏனைய மதங்களுக்கும் இடையிலுள்ள பெரியதொரு வேறுபாடு என்னவென்றால், அவர்கள் ஒரு மதத்தை மட்டுமே ஸ்தாபிக்கிறார்கள். ஆனால் நீங்கள் தர்மம் மற்றும் இராச்சியம் இரண்டையும் ஸ்தாபிக்கிறீர்கள். இது உறுதியாக உள்ளதல்லவா? நீங்கள் ஒரு தர்மத்தையும் அத்துடன் இராச்சியத்தையும் ஸ்தாபிக்கிறீர்கள்தானே? அப்படியானால், இராச்சியத்தில் என்ன இருக்கும்? ஒரேயொரு அரசனும் அரசியும் மட்டுமே இருப்பார்களா? ஓர் அரசன், ஓர் அரசி, அத்துடன் ஒரு மகன் அல்லது மகளான நீங்கள், அவ்வளவுதான்! இப்படிப்பட்டதோர் இராச்சியம் இருக்க முடியுமா? ஆகவே, நீங்கள் இராச்சியத்திற்குள் செல்லப் போகின்றீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். இராச்சியத்திற்குள் செல்வதென்றால், பிராமணக் குடும்பத்துடன் திருப்தியாக இருத்தல், மற்றவர்களைத் திருப்திப்படுத்தல் அத்துடன் மேன்மையான உறவுமுறைகளைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். பாப்தாதா உங்கள் எல்லோரையும் கேட்கிறார்: நீங்கள் மாலையில் ஒருவர் ஆக விரும்புகிறீர்களா? அல்லது, நீங்கள் மாலைக்கு வெளியே இருந்தால் பரவாயில்லை எனச் சொல்வீர்களா? நீங்கள் மாலையில் ஒருவர் ஆக விரும்புகிறீர்களா? நீங்கள் 108 மணிமாலையில் ஒருவராகினாலென்ன அல்லது 16000 மணிமாலையில் ஒருவர் ஆகினாலென்ன, ஒரு மாலையின் மணியாக விரும்புகிறீர்களா இல்லையா? (ஹா ஜி). எனவே, நீங்கள் ஏன் இப்போது பிராமணக் குடும்பத்தைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்? ஏதாவது நடக்கும்போது, ‘பாபா என்னுடையவர். சகோதரிகள் என்ன செய்வார்கள்? சகோதரர்கள் என்ன செய்வார்கள்? நான் சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு சத்தியம் செய்யவில்லைஎன ஏன் நீங்கள் சொல்கிறீர்கள்? எவ்வாறாயினும், இந்த பிராமண வாழ்க்கை ஒரு தூய உறவுமுறைகளுக்கான வாழ்க்கையாகும். மாலையில் மணியாகுவதற்கான வாழ்க்கையாகும். மாலையின் அர்த்தம் ஓர் ஒன்றுகூடல் என்பதாகும். ஆகவே, பிராமணக் குடும்பத்தைப் பற்றிய சந்தேகம் ஏதாவது இருந்தால், வீணான எண்ணம் ஏதாவது இருந்தால், அது உங்களின் நம்பிக்கையைத் தளம்பல் அடையச் செய்துவிடும். அது உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். ‘பாபா நல்லவர், ஞானம் நல்லது, ஆனால் இந்த தாதிகள் நல்லவர்கள் இல்லை, ஆசிரியர்கள் நல்லவர்கள் இல்லை, குடும்பம் நல்லதில்லை’. இவை நம்பிக்கையுள்ள புத்தியைக் கொண்டிருப்பவரின் வார்த்தைகளா? அந்த வேளையில், உங்களைப் புத்தியில் நம்பிக்கை உடையவர் என்று அழைப்பதா? அல்லது புத்தியில் எண்ணங்களை மட்டுமே கொண்டிருப்பவர் என்று அழைப்பதா? வீணான எண்ணங்கள் உங்களின் புத்தியைத் திருப்தியாக இருக்க அனுமதிப்பதில்லை. எனவே, நம்பிக்கையின் சிறப்பியல்பைப் புரிந்து கொண்டீர்களா?

நீங்கள் செய்யும் நான்காவது வகையான இதயபூர்வமான உரையாடல் என்ன? சில ஆத்மாக்கள் சொல்கின்றனர்: ‘இது மிக மேன்மையான காலம் என்பதையும், இது அதிபுண்ணிய யுகம் என்பதையும் இதுவே ஆத்மாக்கள் பரமாத்மாவைச் சந்திக்கும் யுகம் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். எமக்கு இவை எல்லாம் தெரியும்’. எவ்வாறாயினும், பின்னர் என்ன நிகழ்கிறது? நீங்கள் சொல்கிறீர்கள்: ‘இன்னமும் சிறிதளவு காலம் எஞ்சியுள்ளது. விநாசம் மிக விரைவில் நிகழாது. ஸ்தாபனையின் ஆரம்பத்தில் இருந்தே விநாசத்தைப் பற்றிப் பேசப்பட்டு வருகிறது - இன்னொரு தீபாவளி வரப்போவதில்லை என்று!’ ‘அதனால் ஸ்தாபனையின் ஆரம்பத்தில் இருந்தே விநாசத்தைப் பற்றிய பேச்சு இடம்பெறுகிறது. விநாசத்தைப் பற்றிப் பேசியே பல வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. இப்போதுகூட, விநாசம் எப்போது நடக்கும் என்பதே எமக்குத் தெரியாது. நாம் சிறிதளவு கவனக்குறைவு, சோம்பேறித்தனம், பின்தங்கிய முயற்சி என்ற டன்லப் தலையணையில் சற்று ஓய்வெடுப்போம். நாங்கள் காலம் வரும்போது சரியாகிவிடுவோம்.’ நீங்கள் இதை பாபாவிற்கும் உறுதிப்படுத்தி, ‘பாருங்கள், நாங்கள் நேரம் வரும்போது உயர்ந்ததோர் இலக்கத்தைப் பெறுவோம்எனச் சொல்கிறீர்கள். எவ்வாறாயினும், பாப்தாதா எப்போதும் இத்தகைய குழந்தைகளை எச்சரிக்கிறார்: நீங்கள் காலத்திற்கேற்ப விழித்தெழுந்தால், நீங்கள் காலத்திற்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தினால், அது பெரிய விடயமல்ல. ஆனால், காலத்திற்கு முன்னரே நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்தினால், அப்போது உங்களின் முயற்சிகளில் மதிப்பெண்கள் சேமிக்கப்படும். எவ்வாறாயினும், காலத்திற்கேற்ப நீங்கள் முயற்சி செய்தால், காலமே மதிப்பெண்களைப் பெறும். நீங்கள் இல்லை. உங்களின் முழுமையான பெறுபேறுகளில், உங்களின் கவனக்குறைவு மற்றும் சோம்பேறித்தனம் என்ற நித்திரையால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். இவையும் கும்பகர்ண நித்திரையின் சுவடுகளாகும். இது பெரிய கும்பகர்ணன் இல்லை. ஆனால் சிறியதொரு கும்பகர்ணன். அவனுக்கு என்ன நடந்தது? அவனால் தன்னைப் பாதுகாக்க முடிந்ததா? அவனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை, அப்படியல்லவா? அதேபோல், இறுதியில், உங்களால் முழுமையாகச் சித்தி அடைவதற்கு உங்களைத் தகுதியானவர் ஆக்க முடியாதிருக்கும். உங்களுக்குப் புரிகிறதா? சிலவேளைகளில், நீங்கள் ஒரு வகையான இதயபூர்வமான உரையாடல் செய்கிறீர்கள். சிலவேளைகளில், இந்த உரையாடல் மிகுந்த தைரியத்துடன் செய்யப்படுகிறது. சிலவேளைகளில் அது முக்கியம் இல்லாததாக, அற்பமானதாக உள்ளது. ஏனைய வேளைகளில் அது முரண்பாடுகளுடன் கூடியதாக உள்ளது.

இன்று, இது பருவகாலத்தின் முடிவாகும். இது முடிவல்ல. ஆனால் பூர்த்தியாகியுள்ளது. இதனாலேயே, உங்களுக்குப் பெறுபேறுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நான்கு திசைகளிலும் நம்பிக்கையின் அத்திவாரம் உறுதியாக உள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள். அல்லது, உறுதியாக இருப்பதற்குப் பதிலாக, சூழ்நிலைகளால் நான்கு விடயங்களில் ஏதாவதொன்று பலவீனமாக உள்ளதா? எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் மீண்டும் தபஸ்யா செய்யப் போகின்றீர்கள்தானே? உங்களின் அன்பின் அத்தாட்சியை நீங்கள் வழங்க வேண்டும் என உங்களுக்கு முன்னரே சொல்லப்பட்டுள்ளது. உங்களின் அன்பின் அத்தாட்சி, சமமானவர் ஆகுவதாகும். நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு விடயம் என்ன? பாபா உங்களுக்கு இந்த வருடத்திற்கான வீட்டுவேலை தருகிறார். நீங்கள் ஒரு வகையான வேலை என்னவென்று கேட்டீர்கள். இப்போது இதுவே இரண்டாவது விடயம்: நான்கு பக்கங்களிலும் அத்திவாரத்தைப் பலமானது ஆக்குங்கள். எந்தவொரு விடயத்திலும் எந்தவொரு பலவீனமும் இருக்கக்கூடாது. அப்போதுதான் நீங்கள் மாலையின் மணி ஆகுவீர்கள். நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்த ஆத்மா ஆகுவீர்கள். அத்துடன் நீங்கள் இராச்சிய உரிமையுள்ள ஆத்மா ஆகுவீர்கள். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் தேவர்கள் ஆகப் போகும் பிராமணர்கள் ஆவீர்கள். உங்களால் ஒரு பிராமணர் ஆகாமல் தேவர் ஆகமுடியாது. ஆகவே, பிராமணர்களுடன் ஒத்திசைந்து போகக்கூடியதாக இருப்பதென்றால், தெய்வீக இராச்சியத்திற்கான உரிமையைக் கோருவதாகும். ஆகவே, நீங்கள் குடும்பத்திற்கான உங்களின் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் எந்தவொரு குழப்பத்தையும் முடிவிற்குக் கொண்டுவரவேண்டும். அப்போது, நம்பிக்கைக்கும் வெற்றிக்கும் இடையில் சமநிலை காணப்படும். இதுவே இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை முடிப்பதற்கான மகாமந்திரமாகும். நான்கு பக்கங்களிலும் அதைப் பலமானது ஆக்குவதற்கு, நான்கு வகையான நம்பிக்கைகளிலும் நம்பிக்கையின் சதவீதம் சமமாக இருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? வீட்டுவேலை தெளிவாக இருக்கிறதுதானே? நீங்கள் நல்ல மாணவர்கள்தானே? அல்லது, உங்களின் வீட்டுவேலை, உங்களின் நிலைய வேலைகளில் அல்லது உங்களின் வீட்டு வேலைகளில் தொலைந்து போய்விட்டது எனச் சொல்வீர்களா? நீங்கள் அப்படிச் சொல்ல மாட்டீர்கள்தானே? கெட்டிக்கார மாணவர்களின் அடையாளம் என்ன? அவர்கள் தமது வீட்டுவேலையில் முதலாம் இலக்கத்தில் இருப்பார்கள். அத்துடன் அவர்கள் தமது நடைமுறைக் கல்வியிலும் முதலாம் இலக்கத்தில் இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் மதிப்பெண்களைச் சேகரிப்பார்கள். அச்சா.

பாபா வேறு என்ன பெறுபேற்றைப் பார்த்தார்? தற்சமயம், குழந்தைகளில் இரண்டு வகையான கெட்டித்தனத்தை பாபா பார்த்தார். உங்களின் சொந்தக் கெட்டித்தனம் என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே? பாபா கண்ட முதல் வகையான கெட்டித்தனம் என்ன? தன்னைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதும் : சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள். மற்றவர்களைப் பார்க்கும் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள். இவையே இரண்டு விடயங்கள், அப்படித்தானே? பெரும்பாலானோர் எதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்? பாப்தாதா முன்னரும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். அதாவது, சில குழந்தைகளின் குறும்பார்வை நன்றாக உள்ளது. ஏனைய குழந்தைகளின் தூரப் பார்வை மிக நன்றாக உள்ளது. எவ்வாறாயினும், பெரும்பாலானோருக்கு, அவர்களின் தூரப்பார்வை நன்றாக உள்ளது. ஆனால் அவர்களின் குறும்பார்வை சிறிது குறைவாகவே இருக்கிறது. அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அப்போது அவர்களின் கெட்டித்தனம் என்ன? ஏதாவது நிகழும்போதெல்லாம், தங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, அவர்கள் மற்றவர்களைப் பற்றித் தெளிவாகப் பேசுகிறார்கள். அவற்றைப் பெரிதாக்குகிறார்கள். அவர்கள் தமது சொந்த, பெரிய விடயங்களை மிகவும் சிறியதாக்குகிறார்கள். மற்றவர்களின் சிறிய விடயத்தைப் பெரியதாக்குகிறார்கள். பாபா இந்தக் கெட்டித்தனத்தைப் பெரும்பாலானோரில் பார்த்தார். பாபா வேறு என்ன கெட்டித்தனத்தைப் பார்த்தார்? தற்காலத்தில், நீங்கள் மிகவும் விசேடமான மொழியைப் பயன்படுத்துகிறீர்கள். உங்களால் பொய்மையைக் காணச் சகித்துக் கொள்ள முடியவில்லை, பொய்மையைப் பற்றிக் கேட்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனாலேயே, பொய்யான எதையும் கண்டதும், உங்களுக்குள் பெரும் விசை ஏற்படுகிறது. இந்தப் பாஷை சரியா? அது உண்மையற்றதாக இருக்கும்போது, உண்மையற்ற எதையாவது பார்க்கும்போது உங்களுக்கும் இந்த வலிமையான நிலை ஏற்பட்டால், இந்த அழுத்தம் உண்மையா அல்லது பொய்யானதா? எனவே, அந்த அழுத்தமும் பொய்யானதே, இல்லையா? ‘நான் அவர்களுக்கு இதைச் செய்து காட்டுவேன்.’ இந்த முறையில் யாருக்காவது சவால் விடுப்பது சரியாகுமா? ஆகவே, சத்தியத்தின் அடையாளம் என்னவென்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். சத்தியத்தைப் பின்பற்றும் ஒருவர், பொய்மையை முடிக்க விரும்பினால், அது நல்லதோர் இலக்காகும். எவ்வாறாயினும், பொய்மையை முடிப்பதற்கு, ஒருவருக்குள் சத்தியத்தின் சக்தி இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே, வலிமையைப் பிரயோகிப்பதும் கோபமும் சத்தியத்தின் அடையாளங்களா? சத்தியம் இருக்கும் இடத்தில் வலிமையைப் பிரயோகித்தல் இருக்க முடியுமா? பொய்யான ஒரு விடயத்தைப் பார்த்து ஒருவர் கோபம் அடைந்தால், அது சரியாகுமா? ஒருவர் நெருப்பை மூட்டும்போது, நீங்கள் வெப்பத்தை உணர மாட்டீர்களா? அல்லது, உங்களால் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா? அது பொய்மையின் நெருப்பு என்ற ஞானம் உங்களுக்குள் இருக்கும்போது, உங்களால் அதன் வெப்பத்தை உணரக்கூடியதாக இருக்கும்போது, நீங்கள் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பீர்கள்தானே? அல்லது, நெருப்பின் வெப்பத்தால் சிறிதளவு எரிந்து போனால் பரவாயில்லை என நீங்கள் சொல்வீர்களா? எனவே, எப்போதும் சத்தியத்தின் (சத்தியத்தா) அடையாளம் பண்புகள் (சப்யதா) என்பதை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் உண்மையாக இருப்பதுடன், உங்களுக்குள் சத்தியத்தின் சக்தியும் இருந்தால், நீங்கள் ஒருபோதும் உங்களின் பண்புகளைக் கைவிட மாட்டீர்கள். சத்தியத்தை நிரூபியுங்கள். ஆனால் அதை முழுமையான பண்புகளுடன் செய்யுங்கள். நீங்கள் உங்களின் பண்புகளைக் கைவிட்டு, பண்பில்லாமல் சத்தியத்தை நிரூபிக்க முயற்சி செய்தால், உங்களால் அவ்வாறு செய்ய முடியாதிருக்கும். உண்மையில், என்ன நிகழ்கின்றதென்றால், நீங்கள் சத்தியத்தை நிரூபிக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அந்த உண்மையை நிரூபிக்கும்போது உங்களின் பண்புகளைக் கைவிட்டுவிடுகிறீர்கள். அவ்வாறு நிரூபித்தல் பிடிவாதம் ஆகிவிடுகிறது. நிரூபிப்பதாக இருப்பதில்லை. பண்புகள் இல்லாமல் போவதன் அடையாளம், பிடிவாதமாகும். பண்புகள் இருப்பதன் அடையாளம், பணிவாகும். உண்மையை நிரூபிக்கும் ஒருவர் எப்போதும் பணிவாக இருப்பதுடன், பண்பாகப் பழகுவார். எனவே, இரண்டாவது வகை கெட்டித்தனம் என்னவென்பதைப் புரிந்து கொண்டீர்களா? இந்த முறையில் கெட்டிக்காரர்கள் ஆகாதீர்கள். இதுவும் வீட்டுவேலையே - இத்தகைய கெட்டித்தனத்தைக் கைவிட்டுப் பணிவானவர் ஆகுதல். முற்றிலும் பணிவானவர் ஆகுதல். ‘நான் சரி, அவர் பிழைஎனச் சொல்வது பணிவல்ல. யாராவது உண்மையை நிரூபிக்க முயற்சி செய்தால், அங்கு ஏதோவொன்று சரியாக இல்லை என உலக மக்களும் சொல்கிறார்கள். ‘நான் முற்றிலும் உண்மையே சொல்கிறேன். நான் 100 சதவீதம் சத்தியத்தையே பேசுகிறேன்எனச் சொல்வது சில குழந்தைகளின் மொழியாக இருக்கிறது. எவ்வாறாயினும், சத்தியத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. சத்தியம் சூரியன் போன்றது. அதை மறைத்து வைக்க முடியாது. அதற்கு முன்னால் எத்தனை சுவர்கள் வந்தாலும், சத்தியத்தின் ஒளியை மறைத்து வைக்க முடியாது. சத்தியம் நிறைந்த ஒருவர் ஒருபோதும்நான் உண்மையே சொல்கிறேன்எனச் சொல்ல மாட்டார். நீங்கள் உண்மையே பேசுகிறீர்கள் என்பதை மற்றவர்கள் சொல்ல வேண்டும். அச்சா.

நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்? சுய மாற்றம்! மற்றவர்களை மாற்றுவதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அது மற்றவர்களுக்கு நல்லாசிகள் வைத்திருத்தல் என்று சொல்லமுடியாது. அதன்பின்னர் நீங்கள் சொல்கிறீர்கள்: ‘எனக்குக் கவலை இல்லை. ஆனால் மற்றவர்களுக்காக நானே நல்லாசிகள் கொடுக்கிறேன்’. எவ்வாறாயினும், உங்களை மறந்து, மற்றவர்களுக்காக நல்லாசிகள் வழங்குவதை நல்லாசிகள் கொடுப்பவர் என்று அழைக்க முடியாது. மற்றவர்களுடன்கூடவே, முதலில் தன்னிடம் அக்கறை இருக்க வேண்டும். உங்களிடம் உங்களுக்கு அக்கறை இல்லாவிட்டால், நீங்கள் மற்றவர்களுக்கு நல்லாசிகள் கொடுக்க முயற்சி செய்தால், அந்த அம்பு இலக்கில் சென்று தைக்காது. நீங்களும் வெற்றி அடைய மாட்டீர்கள். அனைத்திற்கும் முதலில், சுயம் இருக்க வேண்டும். சுயத்துடன் கூடவே மற்றவர்கள் இருக்கலாம். இது குழந்தைகளுக்காக பாப்தாதாவின் இதயபூர்வமான அன்பாகும். அன்பின் அடையாளம் என்னவென்றால், யார் மீது அன்பு வைத்திருக்கிறோமோ அவர்களில் எந்தவொரு பலவீனத்தையும் எம்மால் சகித்துக் கொள்ள முடியாது. அவர்களின் பலவீனத்தைப் பற்றிக் கேட்கவும் முடியாதிருக்கும். அவரை முழுமை அடையச் செய்வோம். இதுவே இதயபூர்வமான உண்மையான அன்பாகும். பாப்தாதா இதயங்களை வென்றவர் ஆவார். இதனாலேயே, அவர் இதயபூர்வமான அன்பைக் கொடுக்கிறார். அவர் ஒவ்வொரு குழந்தையும் சமமானவராகவும் மேன்மையானவராகவும் இருப்பதைக் காண விரும்புகிறார். அவர் ஒவ்வொரு குழந்தையும் வெற்றி ரூபமாக இருப்பதைக் காண விரும்புகிறார். முயற்சியின் ரூபம் அல்ல. ஆனால் வெற்றி ரூபம். அச்சா.

புத்தியில் சதா நம்பிக்கை கொண்டுள்ள எங்கும் உள்ள மேன்மையான ஆத்மாக்களுக்கும், நம்பிக்கைக்கும் வெற்றிக்கும் இடையில் சதா சமநிலையைப் பேணும் தீவிர முயற்சியாளர் ஆத்மாக்களுக்கும், சதா சுயமரியாதையுடன் இருந்து, சுய மாற்றத்திற்கும் மற்றவர்களின் மாற்றத்திற்கும் மிகச்சரியான, நன்மைதரும் உணர்வுகளைக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கும், சதா தந்தைக்குச் சமமாகுவதுடன் அதற்கான அத்தாட்சியை எப்போதும் கொடுக்கின்ற ஆத்மாக்களுக்கும், எப்போதும் மிகச்சரியான இதயபூர்வமான உரையாடலைச் செய்து வீணான விடயங்களை முடிக்கும் ஆத்மாக்களுக்கும், இதயங்களை வென்றவரான பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:

நீங்கள் எதிர்மறையானதை நேர்முகமாக மாற்றுவதன் மூலம், சுய மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் அதனால் உலகை மாற்றுபவராகவும் ஆகுவீர்களாக.
எந்தவொரு எதிர்மறையான எண்ணத்தை அல்லது சம்ஸ்காரத்தை மாற்றி, ஒரு விநாடியில் நேர்முகமாக மாற்றுவதற்கு, நாள் முழுவதும் நீங்கள் எண்ணக்கட்டுப்பாட்டு வேளையைப் பயிற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், வீணான மற்றும் எதிர்மறையான எண்ணங்களின் வேகம் மிகவும் துரிதமானது. துரித கதியின் எந்தவொரு நேரத்திலும், சக்திவாய்ந்ததொரு தடையைப் பிரயோகித்து, மாற்றத்தை ஏற்படுத்துவதைப் பயிற்சி செய்யுங்கள். அப்போது உங்களால் உங்களின் வீணானவற்றை மாற்றக்கூடியதாக இருக்கும். அத்துடன் ஒரு சுய மாற்றத்தை ஏற்படுத்துபவராகவும் அதனால் உலகை மாற்றுபவராகவும் ஆகமுடியும். அதன்பின்னர், உங்களின் தேவதை ரூபத்தால், உங்களால் பல ஆத்மாக்களுக்கு சந்தோஷத்தினதும் அமைதியினதும் ஆசீர்வாதத்தை வழங்க முடியும்.

சுலோகம்:

நாடகத்தின் ஞானத்தை அறிந்திருப்பவர்களால் மட்டுமே, ‘எதுவும் புதியதல்லஎன்ற வழிமுறையால் வெற்றியாளர் ஆகமுடியும்.

 

--ஓம் சாந்தி---

அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகல இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30வரை விசேட தியானம் செய்யுங்கள். உங்களின் ஒளி மற்றும் சக்தி என்ற ரூபத்தில் ஸ்திரமாக இருந்து, உங்களின் நெற்றியின் புருவமத்தியில் பாப்தாதாவை அழைத்து, ஒன்றிணைந்த ரூபத்தை அனுபவம் செய்யுங்கள். அதன்மூலம் எங்கும் ஒளி மற்றும் சக்தியின் கதிர்களைப் பரப்பும் சேவையைச் செய்யுங்கள்.

Download PDF

Hindi/Tamil/English/Telugu/Kannada/Malayalam/Ilangai Tamil/Sinhala

Post a Comment

0 Comments