Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 28.01.23

 

28-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, மன்மனாபவ என்ற இந்த மகாமந்திரத்தினால் நீங்கள் விவேகமானவர் ஆகுகின்றீர்கள். இந்த மந்திரமே பாவங்கள் அனைத்திலிருந்தும் உங்களை விடுவிக்கின்றது.

கேள்வி:

முழு ஞானத்தினதும் சாராம்சம் என்ன? மன்மனாபவ என்பதில் நிலைத்திருப்பவர்களின் அடையாளங்கள் என்ன?

பதில்:

நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதே முழு ஞானத்தினதும் சாராம்சம் ஆகும். இவ் உலகம் தீயது. ஆகையால் நாங்கள் அதனைத் துறந்து, எங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இவ்வாறு நினைவு செய்வதே, மன்மனாபவவாக இருப்பதாகும். மன்மனாபவ என்ற ஸ்திதியில் நிலைத்திருக்கின்ற குழந்தைகள் சதா ஞானக்கடலைக் கடைகின்றார்கள். அவர்கள் பாபாவுடன் மிகவும் இனிமையான ஆன்மீக உரையாடல்களைக் கொண்டிருக்கின்றார்கள்.

கேள்வி:

எந்தப் பழக்கத்தின் செல்வாக்கில் இருப்பதால், ஓர் ஆத்மாவினால் தந்தையின் நினைவில் நிலைத்திருக்க முடிவதில்லை?

பதில்:

தீய படங்களைப் பார்க்கும் அல்லது தீய செய்திகளை வாசிக்கும் பழக்கம் ஓர் ஆத்மாவிற்கும் இருக்குமாயின், அவரால் தந்தையின் நினைவில் நிலைத்திருக்க முடியாது. சினிமாவும் நரகத்தின் வாசலாகும். அது உங்கள் மனோபாவத்தை சீர்கெடச் செய்கின்றது.

ஓம் சாந்தி. ஆன்மீகத் தந்தை இங்கு அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். குறைந்தளவு புரிந்துணர்வு உள்ளவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது மிகவும் விவேகமானவர்கள் ஆகியுள்ளதால், அவர் உங்களது எல்லையற்ற தந்தை என்பதையும், அவர் உங்களுக்கு எல்லையற்ற கற்பித்தல்களைக் கற்பிக்கின்றார் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர் உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களையும் விளங்;கப்படுத்துகின்றார். ஞானம் மாணவர்களாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். தந்தை நிச்சயமாக உங்களைத் தன்னுடன் மீண்டும் அழைத்துச் செல்வார், ஏனெனில் இது தீய பழைய உலகம் என்பதை அவர் அறிவார். நான் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கே இப்பழைய உலகிற்கு வந்துள்ளேன். பாபா விளங்கப்படுத்துகின்றார்: இங்கே அமர்ந்திருக்கும் வேளையில், அவர் உண்மையிலேயே உங்கள் எல்லையற்ற தந்தை என்றும், அவர் உங்களுக்கு மிகவும் மேன்மையான கற்பித்தல்களைக் கொடுக்கின்றார் என்றும் உங்களுக்குள் உணர்வீர்கள். அத்துடன் அவர் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் விளங்கப்படுத்துகின்றார். இவை அனைத்தையும் நினைவு செய்வதும் மன்மனபவ ஆகும். எனவே இதனை உங்கள் அட்டவணையில் உள்ளடக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் இலகுவாகும்! நீங்கள் வேறெதனையும் செய்யாவிட்டாலும், அமர்ந்திருக்கும் போதும், நடந்து திரியும் போதும் உங்கள் புத்தி இதனை நினைவு செய்யட்;டும். அற்புதமான ஒன்று எப்பொழுதும் நினைவு செய்யப்படும். பாபாவை நினைவு செய்வதாலும், இக் கல்வியைக் கற்பதாலும் நீங்கள் மீண்டும் ஒருமுறை உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இது உங்கள் புத்தியில் தொடர்ந்தும் சுழன்று கொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஒரு பேரூந்து அல்லது புகையிரதம் போன்றவற்றில் பயணிப்பீர்களாயினும், உங்கள் புத்தி நினைவில் நிலைத்திருக்கட்டும். அனைத்திற்கும் முதலில், குழந்தைகளுக்குத் தந்தை தேவை. ஆத்மாக்களாகிய எங்களது ஆன்மீகத் தந்தை எல்லையற்றவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இலகுவான நினைவைக் கொண்டிருப்பதற்காக பாபா உங்களுக்கு இந்த வழிமுறையைக் கொடுக்கின்றார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள், அத்துடன் இந்த யோக அக்கினியினூடாக உங்களது அரைக்கல்பத்தின் பாவச் செயல்கள் எரிந்து விடுகின்றன. பிறவிபிறவியாக, நீங்கள் அதிகளவு பிராயச்சித்தம், மற்றும் யாகங்கள் போன்றவற்றைச் செய்திருக்கின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் தாம் ஏன் அவை அனைத்தையும் செய்கின்றோம் என்பதையேனும் அறியாதுள்ளார்கள். அதனால் அவர்கள் என்ன நன்மையைப் பெறுகின்றார்கள்? அவர்கள் ஆலயங்களுக்குச் சென்று அதிகளவு பக்தி செய்கின்றார்கள்! அவை அனைத்தும் தொன்று தொட்டகாலம் முதல் இடம்பெறுகின்றன என்று அவர்கள் நம்புகின்றார்கள். அவர்களிடம் இருக்கின்ற சமயநூல்களும் தொன்றுதொட்ட காலத்திலிருந்து தொடர்ந்தும் உள்ளது என்றும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், சுவர்க்கத்தில் சமயநூல்கள் இருப்பதில்லை என்பதை மனிதர்கள் உணர்வதில்லை. அவை அனைத்தும் உலக ஆரம்பம் முதல் உள்ளது என்று அவர்கள் நம்புகின்றார்கள். எல்லையற்ற தந்தை யார் என்பதை அவர்கள் எவராலும் உங்களுக்குக் கூற முடியாது. இங்கே, எல்லைக்குட்பட்ட ஒரு தந்தையோ ஓர் ஆசிரியரோ இல்லை. நீங்கள் அனைவருமே ஒரு தொழிலைப் பெறுவதற்கோ அல்லது ஒரு வருமானத்தை ஈட்டுவதற்கோ ஓர் எல்லைக்குட்பட்ட ஆசிரியரினாலேயே கற்பிக்கப்படுகின்றீர்கள். இவர் உங்களது எல்லையற்ற தந்தை என்பதையும், அவருக்கென ஒரு தந்தை இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவரே எல்லையற்ற ஆசிரியரும் ஆவார், அவருக்கென ஓர் ஆசிரியரும் இல்லை. அந்தத் தேவர்களுக்குக் கற்பித்தவர்கள் யார்? இதனை நீங்கள் நிச்சயமாக நினைவு செய்ய வேண்டும். இதுவும் மன்மனாபவ ஆகும். இந்த ஞானம் வேறு எங்கும் கற்பிக்கப்படுவதில்லை. தந்தையே ஞானம் நிறைந்தவர் ஆவார். அவருக்கு எவரேனும் கற்பிக்கின்றார்களா? அவரே மனித உலக விருட்சத்தின் உயிருள்ள விதையாவார். அவர் ஞானக்கடல் ஆவார். அவர் உயிருள்ளவர் என்பதால், அவர் மனித உலக விருட்சத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரைக்குமான இரகசியங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கூறுகின்றார். அவர் இறுதியில் வந்து, ஆரம்பத்தின் ஞானத்தை உங்களுக்குக் கூறுகின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நான் இவருக்குள் அவதரித்து, அவரின் ஊடாக ஆரம்பம் முதல் இக்கணம் வரையான இரகசியங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கூறுகின்றேன். நான் இறுதியைப் பற்றி பின்னர் கூறுவேன். நீங்கள் முன்னேறிச் செல்லும் போது, இறுதி எப்பொழுது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள், ஏனெனில், அந்த நேரத்தில், உங்கள் கர்மாதீத ஸ்திதியை நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதற்கான சமிக்ஞைகளையும் நீங்கள் பார்ப்பீர்கள். தீய பழைய உலகம் அழிய வேண்டும். இது புதியதொரு விடயம் அல்ல. நீங்கள் இதனைப் பல தடவைகள் பார்த்திருக்கின்றீர்கள், அதனை நீங்கள் தொடர்ந்தும் பார்ப்பீர்கள். நீங்கள் ஒரு கல்பத்தின் முன்னரும் இராச்சியத்தைப் பெற்றீர்கள், பின்னர் அதனை இழந்து, இப்பொழுது மீண்டும் அதனைக் கோருகின்றீர்கள். பாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்களே உலக அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதையும், அதன் பின்னர் 84 பிறவிகளை எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். மீண்டும் ஒருமுறை உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காகவே, அவர் அதற்குரிய அதே ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். பாபா ஆசிரியராகவும் இருக்கிறார் என்பதையும் உங்களுக்குள் நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். அச்சா. உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியாவிட்டால், ஆசிரியரை நினைவு செய்யுங்கள். ஒருவரால் தனது ஆசிரியரை எப்போதேனும் மறக்க முடியுமா? நீங்கள் ஆசிரியருடனேயே தொடர்ந்தும் கற்கின்றீர்கள். ஆம், மாயை உங்களைத் தவறுகளைச் செய்யத் தூண்டுவாள், எனினும் நீங்கள் அதனை அறியாதுள்ளீர்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் மறந்து விடுமளவிற்கு மாயை உங்கள் கண்களில் தூசியைத் தூவுகின்றாள். தந்தை உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இந்த விளக்கம் எல்லையற்றது, ஆனால் அது எல்லைக்குட்பட்டதாகும். பாபா இந்த எல்லையற்ற ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் கொடுக்கின்றார். அச்சா. உங்களால் நன்றாகக் கற்க முடியாது விட்டால், பாபாவைத் தந்தை என்ற வடிவில் நினைவு செய்யுங்கள். அவருக்கென ஒரு தந்தை இல்லை. அவர் அனைவரதும் தந்தையாவார். அத்துடன் அனைவரும் அவரது குழந்தைகள் ஆவார்கள். சிவபாபா யாருடைய குழந்தை என்று எவராலும் கூற முடியுமா? அவர் எல்லையற்ற தந்தை ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைக்கு உரியவர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். எங்கள் கல்வி அற்புதமானதாகும்! பிராமணர்களாகிய நாங்கள் மாத்திரமே இக்கற்பித்தல்களைக் கற்கின்றோம். தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், மற்றும் சூத்திரர்கள் இதனைக் கற்பதில்லை. தந்தை கொடுக்கின்ற ஞானம் தனித்துவமானதாகும். அதனை உங்களைத் தவிர வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுகின்றீர்கள் என்பதை அறிந்திருப்பதால், குழந்தைகளாகிய உங்கள் சந்தோஷ பாதரசம் அதிகரிக்கின்றது. நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற வேண்டுமாயின், நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். எனினும், அனைவருமே சுவர்க்கத்திற்குச் செல்வார்கள் என்றில்லை. நீங்கள் ஞானத்தையும் யோகத்தையும் கிரகிக்காவிட்டால், உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. பாபா கூறுகின்றார்: நீங்கள் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்கள் ஆக வேண்டுமாயின், நினைவு செய்வதற்கு அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை என்பதைச் சோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகள் என்பதால், நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் அனைவரும் இப்பொழுது கற்று, மலர்கள் போல் ஆகுகின்றீர்கள். இக்கல்வி மாத்திரமே உங்களுடன் வரும். புத்தகங்கள் போன்றவற்றை நீங்கள் கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனைய கல்வி முறைகளில், நீங்கள் பல புத்தகங்கள் போன்றவற்றைக் கற்க வேண்டும். பாபாவின் இந்த ஞானம் தனித்துவமானதும், மிகவும் இலகுவானதும் ஆகும். எவ்வாறாயினும், இது மறைமுகமானது. நீங்கள் என்ன கற்கின்றீர்கள் என்பதை உங்களை அன்றி வேறு எவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இது அற்புதமானதொரு கல்வியாகும். தந்தை கூறுகின்றார்: என்றுமே வராமல் இருக்காதீர்கள். இக்கல்வியை என்றுமே விட்டு விலகாதீர்கள். பாபா அனைவரதும் பதிவேட்டைப் பெறுகின்றார். அதிலிருந்து ஒருவர் பத்து மாதங்களுக்கு வராதிருந்தால் அல்லது இன்னொருவர் ஆறு மாதங்களுக்கு வராதிருந்தால் பாபாவினால் புரிந்து கொள்ள முடியும். சிலர் முன்னேறிச் செல்லும் பொழுது, இக்கல்வியை விட்டு விலகி விடுகின்றார்கள். இது மிகவும் அற்புதமானது. இதனை விட அற்புதமானது வேறெதுவும் இல்லை! அத்தகைய தந்தை வந்து, ஒவ்வொரு கல்பத்திலும் குழந்தைகளாகிய உங்களைச் சந்திக்கின்றார். இந்தச் சரீரத் தந்தை மறுபிறப்பெடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வருகின்றார். அதுவே உங்களுக்கும் பொருந்தும். இது ஒரு நாடகமாகும். ஒரு நாடகத்தை என்றுமே மறக்க முடியாது. ஒரு நாடகம் எப்பொழுதும் நினைவு கூரப்படுகின்றது. பொதுவாகவே இவ்வுலகம் நரகம் என்றும், குறிப்பாகச் சினிமா நரகம் போன்றது என்றும் பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அங்கே செல்வதால், உங்கள் மனோபாவம் முற்றிலும் சீர்கெட்டு விடுகிறது. அவர்கள் நல்ல படங்களைப் பார்க்கும் போதும், புத்தி அதனிடம் ஈர்க்கப்படுகின்றது. இன்னார் மிகவும் அழகானவர், அவருக்கே பரிசு கிடைக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. அத்தகைய படங்களை நீங்கள் ஏன் பார்க்கின்றீர்கள்? முழு உலகமும் முடிவடைய உள்ளது என்பதை உங்கள் புத்தி புரிந்து கொண்டுள்ளது. என்னை மாத்திரம் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். அத்தகைய பொருட்களைப் பற்றி நினைக்கவோ அல்லது பார்க்கவோ வேண்டாம். அந்த களங்கமான சரீரங்கள் அனைத்தும் பழைய உலகிற்குரியவை ஆகும். அதில் பார்ப்பதற்கு என்ன உள்ளது? தந்தையை மாத்திரமே பாருங்கள். பாபா கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இலக்கு மிகவும் உயர்ந்தது. மாயை சற்றேனும் சளைத்தவள் அல்ல. மாயையின் பகட்டு எவ்வளவு உள்ளதென்று பாருங்கள்! அப்பக்கம் விஞ்ஞானமும் இப்பக்கம் உங்களது மௌனமும் உள்ளது. அவர்கள் முக்தியை மாத்திரம் விரும்புகின்றார்கள், இங்கோ ஜீவன்முக்தி அடைவதே உங்களது இலட்சியமும் இலக்கும் ஆகும். ஜீவன்முக்திக்கான பாதையை உங்களுக்கு வேறு எவராலும் காட்ட முடியாது. சந்நியாசிகள் போன்றோரால் இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்க முடியாது. தொடர்ந்தும் வீட்டில், குடும்பத்துடன் வாழ்ந்த போதும், தூய்மையாக இருங்கள் என அவர்களால் எவருக்கும் கூற முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். பக்தி மார்க்கம் நேரத்தை வீணாக்குவதன்றி வேறு எதுவும் அல்ல. பல தவறுகள் இடம்பெற்றுள்ளன! தவறுகள் செய்த வேளையில், அவர்கள் முற்றிலும் அறியாமைக்குள் வந்துள்ளார்கள். இந்த இறுதிப் பிறவி நூறு வீதத் தவறுகள் கொண்ட பிறவிகளில் ஒன்றாகும். புத்தி சற்றேனும் செயற்படுவதில்லை. பாபா விளங்கப்படுத்துவதனாலேயே நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அனைத்தையும் புரிந்து கொண்டிருப்பதால், உங்களால் பிறருக்கு விளங்கப்படுத்த முடியும். உங்களது சந்தோஷ பாதரசமும் அதிகரிக்கின்றது. தந்தைக்கு ஒரு தந்தையோ அல்லது ஆசிரியரோ இல்லாதிருப்பது ஓர் அற்புதமே. அவ்வாறாயின், அவர் எங்கிருந்து கற்றார்? இதனையிட்டு மனிதர்கள் வியப்படைவார்கள். இவற்றை இவர் நிச்சயமாக யாரோ ஒரு குருவிடம் கற்றிருக்கின்றார் என்று பலரும் நினைக்கின்றார்கள். அவர் இதனை ஒரு குருவிடம் கற்றிருந்தால், அந்தக் குருவிற்கு இன்னமும் பல சிஷ்யர்கள் இருந்திருக்க வேண்டும். இந்த ஒரேயொரு சிஷ்யர் மாத்திரம் இருக்க முடியாது. ஒரு குருவிற்குப் பல சிஷ்யர்கள் இருப்பதுண்டு. அகா கானுக்கு எத்தனை சிஷ்யர்கள் உள்ளனர் என்று பாருங்கள்! அவர்கள் தமது குருவிற்கு எவ்வளவு மரியாதை கொடுக்கின்றார்கள் என்று பாருங்கள்! அவர்கள் அவரை வைரங்களிற்கு நிகராக நிறுக்கின்றார்கள். நீங்கள் அவரை (சிவபாபா) எதற்கு நிகராக நிறுப்பீர்கள்? அவர் பரமன் ஆவார். அவருடைய நிறை என்ன? நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் அவரை நிறுத்தால், அவருடைய நிறை என்னவாக இருக்கும்? அவரை நிறுப்பதற்காக உங்களால் எதனையேனும் பயன்படுத்த முடியுமா? சிவபாபா ஒரு புள்ளியாவார். இக்காலத்தில், பலரும் ஏதோ ஒன்றிற்கு நிகராக நிறுக்கப்படுகின்றார்கள். சிலர் தங்கத்திற்கு நிகராகவும், சிலர் வெள்ளிக்கு நிகராகவும், இன்னமும் சிலர் பவளத்திற்கு நிகராகவும் கூட நிறுக்கப்படுகின்றார்கள். அது தங்கத்தையும் விட விலையுயர்ந்ததாகும். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: அந்த உலகக் குருமார்கள் உங்களுக்குச் சற்கதியை அருள மாட்டார்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்குச் சற்கதிக்கு வழிகாட்டுவார். அவரை எதனால் உங்களால் நிறுக்க முடியும்? மனிதர்கள் கூறுகின்றார்கள்: கடவுளே! கடவுளே! அவரே தந்தையும், அவரே ஆசிரியரும் என்பதை அவர்கள் அறியவில்லை. அவர் மிகவும் சாதாரணமாக உள்ளார். அவர் குழந்தைகளாகிய உங்கள் அனைவரது முகங்களையும் பார்ப்பதற்காகச் சற்று உயரத்தில் அமர்ந்திருக்கின்றார். உதவியாளர்களான குழந்தைகளாகிய நீங்கள் இல்லாது, என்னால் எவ்வாறு ஸ்தாபனையை உருவாக்க முடியும்? அவருக்கு அதிகளவு உதவி செய்கின்றவர்கள் மீது பாபா நிச்சயமாக அன்பு கொண்டுள்ளார். லௌகீக வாழ்விலும், ஒரு குழந்தை 2000 ரூபாயையும் மற்றவர் 1000 ரூபாயையும் உழைத்தால் எக் குழந்தையைத் தந்தை அதிகளவு நேசிப்பார்? எவ்வாறாயினும், இக்காலத்தில், குழந்தைகள் தமது பெற்றோரைப் பற்றிய அக்கறையின்றி கூட உள்ளனர். இக் குழந்தை மிகவும் நல்ல உதவியாளர் என்பதை எல்லையற்ற தந்தையும் பார்க்கின்றார். உங்களைப் பார்க்கும் போது, பாபா மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். ஆத்மா மகிழ்ச்சியடைகின்றார். நான் ஒவ்வொரு கல்பத்திலும் வரும் போது, எனது குழந்தைகளைக் காணும் பொழுது மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில், அவர்கள் ஒவ்வொரு கல்பத்திலும் எனது உதவியாளர்கள் ஆகுகின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். தந்தையிடமிருந்து பெறும் இந்த அன்பு ஒவ்வொரு கல்பத்திலும் நிலைத்துள்ளது. நீங்கள் எங்கே அமர்ந்திருந்தாலும், பாபாவே உங்கள் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். அவரே அனைத்தும் என்பதால், அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். சத்தியயுகத்தில் எவரும் அவரை நினைவு செய்ய மாட்டார்கள். ஏனெனில், அப்பொழுது 21 பிறவிகளுக்கான உங்கள் படகு அக்கரை சேர்ந்திருக்கும். இவ்வாறு நினைவு செய்வதன் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் முகமலர்ச்சியுடன் இருக்க வேண்டும். அத்தகைய தந்தைக்கான சேவையை நீங்கள் செய்கின்றீர்கள் என்பதையிட்டு நீங்கள் சந்தோஷம் அடைய வேண்டும். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். அவர் எல்லையற்ற தந்தை ஆவார். தந்தை மாத்திரமே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். தந்தையும் எங்கள் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். அத்தகைய விளக்கத்தை நீங்கள் கொடுக்கும் போது, அவர்களால் அதன்பின்னரும் கடவுள் சர்வவியாபகர் என்று கூற முடியாது. தந்தை கூறியுள்ளார்: புத்தியில் அன்பில்லாதவர்கள் விநாச காலத்தின் பொழுது அழிந்து விடுவார்கள். அவர்கள் அனைவருமே அழிந்து விடுவார்கள். நீங்கள் மாத்திரமே வெற்றியைக் காண எஞ்சியிருப்பீர்கள். நீங்கள் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். ஆத்மாக்களின் தந்தை ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆகையால், அந்த அற்புதமான விடயங்களை அனைவரிடமும் கூறுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய் தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. நீங்கள் சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகள் என்பதால் நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். உங்கள் எண்ணங்களினாலும், வார்த்தைகளினாலும், செயல்களினாலும் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.
  2. ஆசிரியர், கற்பித்தல்கள் இரண்டுமே அற்புதமாகும். அத்தகைய அற்புதமான கற்பித்தல்களைத் தவற விடவோ அல்லது சமூகமளிக்காமலோ இருக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் சதா ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் இருப்பவராகவும் அனைவருக்கும் உற்சாகத்தைக் கொடுக்கின்றவராகவும் இருக்கின்ற ஆன்மீக சேவையாளராகுவீர்களாக.

பாப்தாதா ஆன்மீக சேவாதாரிக் குழந்தைகளான உங்களுக்கு இந்த அன்புப் பரிசினைக் கொடுக்கின்றார்: குழந்தைகளே, ஒவ்வொரு நாளும் நீங்கள் உற்சாகத்துடன் இருப்பதுடன் அனைவரையும் உற்சாகப்படுத்துகின்ற விழாவினைக் கொண்டாடுங்கள். இதனைச் செய்வதன் மூலம் உங்கள் சம்ஸ்காரங்களை ஒத்திசைவதற்கும் முடித்துவிடுவதற்கும் நீங்கள் செய்யும் முயற்சியிலிருந்து விடுவிக்கப்படுகின்றீர்கள். சதா இவ்விழாவினைக் கொண்டாடுங்கள். உங்கள் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவடைந்து விடும். அப்போது நீங்கள் நேரத்தை செலவழிக்கவோ உங்கள் சக்திகளைப் பயன்படுத்தவோ தேவையில்லை. நீங்கள் சந்தோஷத்தில் பறந்து நடனமாடும் தேவதைகளாக ஆகுவீர்கள்.

சுலோகம்:

நாடகத்தின் இரகசியங்களைப் புரிந்து கொண்டவர்கள் எதுவுமே புதிதல்ல என்ற பாடத்தினை உறுதியாக்குவதால் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆவார்கள்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments